search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய அறிக்கை"

    சென்னை-சேலம் இடையே 8 வழிபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமை சாலை திட்டத்துக்கு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #chennaisalemexpressway

    சென்னை:

    சென்னை-சேலம் இடையே 277 கி.மீ தூரத்துக்கு 8 வழி பசுமை சாலைத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘‘பாரத்மலா பரியோனா திட்டம்’’ கீழ் அமல்படுத்தப் படுத்தப்பட இருக்கும் இந்த பசுமை வழிச்சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்கு சுமார் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதார நிலத்தை மத்திய- மாநில அரசுகள் பறிக்க கூடாது என்று போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்களில் நிலம் அளவிடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்போது இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ‘‘8 வழி பசுமை சாலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய உள்ளோம். அதுவரை இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது’’ என்றார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சில புதிய உத்தரவுகளை பிறப்பித்தனர். ‘‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் அறிக்கை வெளியிட்டு நிலம் கையகப்படுத்தக் கூடாது’’ என்று தடை விதித்தனர்.

    இந்த நிலையில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாகி உள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பசுமை வழி சாலைத்திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம் மாவட்டங்களில் நிலத்தை கையகப்படுத்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 1956-ன்படி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மூன்று மாவட்டங்களிலும் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்த வேண்டிய மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழி சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் தொடர்பாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 59.28 கி.மீ தொலைவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவாக அந்த அறிவிக்கை அமைந்துள்ளது.

    அதன்படி ஸ்ரீபெரும் புதூர், செங்கல்பட்டு, உத்திர மேரூர் தாலுக்காக்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 39 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைய உள்ளதால் இந்த 3 தாலுக்காக்களிலும் மக்கள் பயன்படுத்தும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

    39 கிராமங்களிலும் 1510 பேரின் நிலம் பசுமை வழி சாலைத் திட்டத்துக்கு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசின் புதிய அறிவிக்கை காஞ்சீபுரம் மாவட்ட மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பசுமை சாலை திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்டில் உள்ள நிலையில் புதிய அறிவிக்கை மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. இந்த திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுவதால் தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. #chennaisalemexpressway

    ×